ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா – இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். இங்கு கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தன் பொன்னான நேரத்தைச் செலவிட்டு வன விலங்கு ஆர்வலரான புகைப்படக்காரர் ராஜிவ் புலிகளின் சிறப்பு குணங்களைப் பட்டியலிட்டு தன் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா. 1936-ல் நிறுவப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம், நைனிட்டால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இது முதலில் எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டு பின்னர் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலருமான ஜிம் கார்பெட்டின் பெயர் சூட்டப் பெற்றது. இந்தியாவிலேயே இந்த விலங்கியல் தேசிய பூங்காவிற்கு மட்டும் வேட்டைக்காரராகவும் இயற்கை பாதுகாவலருமான ஜிம்கார்பெட்டின் பெயரை இன்று வரை மாற்றப்படாமல் அவர் பெயரில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு.
புலிகள் சாதாரணமாக மனிதர்களை விட்டு விலகி வாழும் பழக்கம் கொண்டவை. நம்முடைய வாசனை, மிட்சுபிஷி ஜீப்பின் ஒலியைக் கேட்டாலே அவை அந்த இடத்தை விட்டு அகன்று விலகி மனித சஞ்சாரம் இல்லாத இடத்திற்குச் சென்று, புதர் மறைவிலும், புல்வெளியிலும் தன்னை மறைத்துக்கொண்டு கவனிக்கும்.
புலிகள் வருவதை சத்தமிடும் மான் கூட்டங்களும், குரங்குகள் எழுப்பும் ஒலியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் புலிகளின் வாசத்தை நன்கு அறிந்தவை இவ்விரண்டு விலங்கினங்கள். ஆனால் தன் வாசனையை இவை அறிந்து கொள்ளும் என்பதை புலிகள் அறிந்துகொண்டு இரை தேடச் செல்லும் முன்பு தன் உடலை யானை சாணத்தில் புரண்டு விட்டு, தன் வாசனையை மறக்கடித்து யானை வாசனையைப் பெற்றுவிடும். அந்தச் சமயத்தில் வருவது புலி அல்ல.. யானைதான் என தவறாகப் புரிந்து கொண்டு மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும். மிகச் சுலபமாக தன் இரையை வேட்டையாடி உண்ணும். புலிகள் சூழ்ச்சி நிறைந்தவை என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
பொதுவாக சிறுத்தைகள் மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்துவிடும். ஆனால் புலிகள் ஓடவே ஓடாது. மிகவும் நின்று நிதானமாகச் செல்லும். அதிலும் ஆண் புலிகள் கூச்ச சுபாவம் கொண்டவை. தன்னுடைய பகுதிக்கு யார் யார் வருகின்றனர் என்பதை உடலில் இருந்து வெளிப்படும் வாசனை காட்டிக் கொடுத்துவிடும். இங்கு காணப்படும் புலிகளுக்கு அந்தந்த இடத்தை வைத்தே அவை அழைக்கப்படுகின்றன. பார்வல்லி புலி, பி புலி ( ஆங்கில எழுத்தான P) என்பதை தன் முகத்தில் அந்தப் புலி கொண்டிருக்கும். மழை, மற்றும் குளிர்காலங்களில் மட்டும் நம்மால் புலிகளைக் காணமுடியும். கோடைக்காலத்தில் அவற்றைப் பார்க்க முடியாது.
யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் வழக்கம் கொண்டவை. நிறைய நேரம் தண்ணீரில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடன் தன் உடல் மீது மண்ணை வாரி அடித்துக்கொள்ளும். இதனால் ஈர உடம்பில் நிறைய சேற்று மண் ஒட்டிக்கொள்ளும். இது சிறு சிறு பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்கச் செய்யும் சிறு தந்திரம்.
இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும் பாலூட்டிகளில் 50-ம், பறவைகளில் 580 சிற்றினங்களும் ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் இருக்கின்றன. பல்லி இனத்தைச் சேர்ந்த மானிட்டர் லிசார்டு மிகவும் கம்பீரமாக நடந்து வருவதை அழகாகப் படம் பிடித்திருந்தார் ராஜீவ்.
இந்தத் தேசியப் பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. தேசியப் பூங்கா ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை திறந்திருக்கும். இந்த தேசியப் பூங்காவைச் சுற்றி நிறைய மேய்ச்சல் நிலங்களும் மலைகளும் இருக்கின்றன.
இந்தத் தேசியப் பூங்கா ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நுழைவாயில்கள் மூலம் வன விலங்குப் பிரியர்கள், ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் நுழைய முடியும்.
அவையாவன… பிஜ்ராணி சபாரி, ஜிர்னா சபாரி, தீலா சபாரி, திக்காலா சபாரி, துர்கா தேவி சபாரி, சீதாபானி சபாரி
திக்காலா சபாரியில்தான் ராஜீவ் பயணப்பட்டிருக்கிறார்.
ராம்நகர்தான் கார்பெட் பூங்கா செல்ல சிறந்த வழி. ஏனென்றால் எல்லா ஊர்களில் இருந்து வரும் சாலைகள் ராம்நகரை வந்தடையும். டெல்லி, மொராடாபாத், நைனிட்டால், பரேலி ஆகிய இடங்களுக்கு ரயில் மார்க்கமாகவும், சாலை மூலமாகவும் ராம்நகரைச் சென்றடையலாம். ராம்நகர் ரயில்நிலயத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் கார்பெட்தேசியப் பூங்கா அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து நேரடியாக ராம்நகருக்குச் செல்லும் ரயிலும் உண்டு.
திக்கால சபாரி மண்டலத்திலிருந்துதான் ராஜீவ் இந்தப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். காட்டுக்குள் தங்கும் வசதியும் உண்டு. இண்டர்நெட் மூலம் பதிவு செய்து தங்கும் விடுதிகளில் காட்டுக்குள் அறைகளைப் பெற்று காட்டைச் சுற்றிப் பார்க்கலாம். பறவைப் பிரியர்களுக்கு நல்ல உணவளிக்கும் கார்பெட் பூங்கா அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஓர் அருமையான இடம். அப்ப அடுத்த வருடம் திட்டமிட்டு கார்பெட் போலாமா….
நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் சுவாமிநாதன் புகைப்படக்காரர் ராஜீவுக்கு நன்றி கூறி, புலிகளின் ஆவணங்களையும் அதை பல வருடங்களாக ஆவணப்படுத்திய ராஜீவினைப் புகழ்ந்தார். விலங்குகளிடமிருந்து வாழும் ஒத்திசைவான வழிகளைப்பற்றிக் கூறியதுடன் அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
வன மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.