மாறிவரும் பருவநிலை மாற்றம், உயர்ந்து வரும் கடல் மட்டம், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக லட்சத் தீவுகளில் உள்ள பவளப் பாறைகள் மற்றும் பவளத்திட்டுகளில் எந்த அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த கருத்தரங்கம் சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹவாய் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி ஸ்ரேயா யாதவ் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
தன் உரையில் அவர் குறிப்பிட்டதாவது, ”கடல் வாழ் உயிரினங்களின் புகழிடமாகவும், இயற்கை சமன்பாடு மாறாமல் இருப்பதற்கு உதாரணமாக இருப்பது பவளப்பாறைகள். லட்சத்தீவுகள் மற்றும் மால்தீவுகள் போன்ற ஆழமற்ற கடல் பகுதிகளில் பவளப்பாறைகள் மற்றும் பவளத்திட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை கடலில் தடுப்பு போல செயல்பட்டு அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நம் கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன. ஆழம் குறைவான பகுதிக்கு அலைகள் வரும்போது பவளத்திட்டுகள் மீது பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. இதன் மூலம் அலைகள் வலுவிழக்கின்றன. பவளத்திட்டுகள், பவளப் பாறைகள் இல்லையென்றால் நமது கடற்கரையின் பெரும்பகுதி அரிக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கிவிடும். நமது தீவுகள் குறுகிக் குறுகி சிறியதாகிவிடும். பவளத்திட்டுகள்தான் இவை அனைத்தையும் பாதுகாக்கின்றன.
பல கடல் உயிரினங்கள், மீன்களுக்குத் தங்குமிடம், உணவுகிடைக்கும் இடம், இனப்பெருக்கம் செய்யுமிடம், குஞ்சுகளை வளர்க்கும் இடமாக பவளத்திட்டுகள் இருக்கின்றன. பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் பவளப்பாறைகள் இருக்கின்றன. வணிகரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கிளி மீன், டியூனா மீன்கள் என பல மீன்கள் இங்குதான் உற்பத்தி ஆகின்றன. லட்சத்தீவில் குறிப்பாக அகாட்டி, கட்மேட், கவராட்டி ஆகிய தீவுகளில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. 1998, 2007, 2016 – ஆண்டுகளில் எல் நினோ தொடர்பான பாதிப்பு மற்றும் கடல் நீரின் வெப்பத்தால் லட்சத்தீவு பவளப் பாறைகள் பாதிப்புக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. இந்த கடல் நீர் சூடேற்றத்தினால் மெதுவாக வளரக்கூடிய பவளப்பாறைகள் முழுவதுமாக அழியாமல் மீட்சி அடைந்து வருகின்றன.கடந்த இருபதாண்டுகளில் மாறிவரும் வெப்ப மண்டல நிகழ்வுகளிலிருந்து பவளப்பாறைகள் தங்களை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வேகமாக வளருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம் விஞ்ஞானிகள் அறிந்திருப்பது… வெப்ப மாற்றத்தினால் வேகமாக வளரும் பவளப்பாறைகளின் எண்ணிக்கை குறைவதும், மெதுவாக வளரும் பவளப்பாறைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான்!
பவளத்திட்டுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கின்றன. பவளப் பாறைகள் சுற்றுச்சூழல், உலக வெப்பமயமாதல் காரணமாக 1998-லிருந்து 2010 வரை மிகவும் குறைந்து காணப்பட்டன. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பவளப்பாறையின் அழிவு அதிகமாக இருக்கும் என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். இந்த அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பது பிளாஸ்டிக் மற்றும் கடல் நீர் சூடேற்றம் என்று கூறப்படுகின்றன. ஆனால், இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும் கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்ததால் தற்போது படிப்படியாக அவை எண்ணிக்கையில் உயர்ந்து வருகின்றன” எனக் கூறினார் ஸ்ரேயா யாதவ்.
கருத்தரங்கில் பேராசிரியர் ம.சா.சுவாமிநாதன் மற்றும் மீனாசுவாமிநாதனுடன், விஞ்ஞானிகளும், திரளான ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வை. செல்வம் வரவேற்றார். இறுதியில் உயிர்தொழில்நுட்பவியல் துறையின் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன் நன்றி கூறினார்.