சென்னை, ஜூலை 17. 2018: இந்தியாவின் அறிவு மையங்களாக நூலகங்களை உருவாக்குவதில் பொது நூலகங்களின் பங்கு என்ற தலைப்பில் நூலகர்கள் மாநாடு இன்று சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்திய பொதுநூலக இயக்கம் மற்றும் இனெலியின் நிறுவனரும் ஆலோசகருமான முனைவர் பஷீரகமது ஷட்ராக், இந்திய பொதுநூலக இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சுபாங்கி ஷர்மா, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் பள்ளி கல்வி இயக்குநரும் பொது நூலகங்களின் இயக்குநருமான முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன், பொது நூலகங்கள் இயக்குநரகத்தின் துணை இயக்குநர் நாகராஜ் முருகன், ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் வை.செல்வம், தகவல், கல்வி, தொழில்நுட்பத்துறையின் இயக்குநர் நான்ஸி ஜெ. அனபெல் மற்றும் தமிழ்நாடு, கேரளா, கோவா, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து நூலக இயக்குநர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”தேசிய அளவில் நூலகங்களைப் பயன்படுத்தி சிறந்த கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற நூலகங்கள் நமக்குப் பயன்படுகின்றன. வரும் ஆண்டில் தேசிய அளவில் நூலகர்கள் இணைந்து கருத்தரங்கம் நடத்த தமிழக அரசு சார்பாக பத்து லட்சமும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளர்ச்சிக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இன்னும் இரண்டு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் துவங்க இருக்கின்றன. இந்த பயிற்சி மையம் இந்தியாவுக்கே சிறந்த வழிகாட்டியாக இருக்கப்போகின்றன. கிராமப்புற மாணவர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கு தயாராக சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் அமைந்துள்ள நூலகங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” எனக் கூறியதோடு தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்களின் வளர்ச்சிக்கு நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
இந்திய பொது நூலக இயக்கம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து “பொது நூலக ஒருங்கிணைப்பு” ஆண்ட்ராய்டு அலைபேசி செயலியை இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துவக்கி வைத்தார். இதன் மூலமாக பொது நூலகச் சேவைகள் அனைத்தும் பொதுமக்கள் அனைவரும் பெறமுடியும். இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
1. நீங்கள் தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்தாலும் ஜி.பி.எஸ் மூலமாக அருகிலுள்ள பொது நூலகங்களை சில நிமிடங்களில் கண்டறிய முடியும்.
2. அருகிலுள்ள பொது நூலகத்தினுடைய தொடர்பு எண்களுடன் கூடிய விவரங்கள்.
3. பொது நூலகங்கள் வழங்கக்கூடிய புதுச்சேவைகள் மற்றும் நிகழ்வுகளின் விவரங்கள்.
4. பொது நூலகங்களின் சேவை மற்றும் நிகழ்வுகளை எளிதாக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி.
5. நீங்கள் அடிக்கடி செல்லும் பொது நூலகங்களை எளிதான தொடர்புக்காக குறித்து வைத்துக்கொள்ளும் வசதி
6. நீங்கள் எடுத்து உபயோகப்படுத்தும் புத்தகங்களின் அனைத்து விவரங்களையும் ‘புக் ரெக்கார்ட்’ என்ற பகுதியில் (நூலாசிரியர், பதிப்பகத்தின் விவரம், நூலை எடுத்த தேதி, திரும்ப கொடுக்க வேண்டிய தேதி, நூலகத்தின் விவரம் முகவரியுடன் பதிவு செய்து கொள்ளும் வசதி).
பேராசிரியர் சுவாமிநாதன் தன் உரையில் குறிப்பிட்டதாவது, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே ஏழை மக்களுக்கு அறிவை வழங்கு வேண்டும் என்பதுதான். அதற்காகவே மாவட்ட அளவில் மக்களைச் சென்றடைய கிராம வள மையங்களும், கிராம அளவில் சென்றடைய கிராம அறிவு மையங்களும் துவங்கப்பட்டன. ஏழைகளுக்கு வழங்க எங்களிடம் பணமும், நிலமும் இல்லை. ஆனால் பகிர்ந்து கொள்ள அறிவு இருந்தது. அரசுத் தரப்பில் வெளியிடப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெற இந்த கிராம, வள மையங்கள் துணைபுரிந்தன. ஒவ்வொரு கிராம அறிவு மையத்திலும் நூலகத்திற்கென தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் அறிவுமையங்களாக நூலகங்களை உருவாக்குவதில் பொது நூலகங்களின் பங்கை சிறப்பிக்கும் விதமாக, ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் இனெலி., இந்திய பொது நூலக இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்திய பொதுநூலக இயக்கம் மற்றும் இனெலியின் நிறுவனரும் ஆலோசகருமான முனைவர் பஷீரகமது ஷட்ராக் தன் உரையில், ”நாட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக தமிழக பொது நூலகம் செயல்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து நூலகங்களும் தனித்தன்மையுடன், ஜனநாயகத்தின் மாதிரியாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டிற்கு வந்தவர்களை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வை.செல்வம் வரவேற்றார். தகவல், கல்வி, தொழில்நுட்பத்துறையின் இயக்குநர் நான்ஸி ஜெ.அனபெல் நன்றி கூறினார்.