ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர் தொழில்நுட்ப கம்பெனி (WABAG) இயக்குநர்கள் இன்று ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சி சென்னையில் அமைந்துள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வளாகத்தில் இன்று (19.9.17) நடைபெற்றது. தமிழ்நாட்டின் விழுப்புர மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் அளிக்கவே இந்த ஒப்பந்தம். பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னிலையில், வபேக் நிறுவனத்தின் தரப்பில் இயக்குநர் மற்றும் முதன்மை வளர்ச்சி அதிகாரியுமான எஸ்.வரதராஜன் மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான முனைவர். வை.செல்வம் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பேராசிரியர் சுவாமிநாதன் பேசுகையில், ”நீர் வழங்கல் குறித்து இது முக்கியமான உடன்படிக்கை. நிலத்தடி நீர் மேலாண்மை மூலம் நீர் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். எங்கள் நிறுவனம் சிறியது, ஆனால் வபேக் நிறுவனம் மிகப்பெரியது. நிலத்தடி நீர் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு பொது நோக்கத்துடன் சிறிய, பெரிய நிறுவனங்கள் இணைந்து செயல்படப்போகின்றன” என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
எஸ்.வரதராஜன் பேசும்போது, ”தண்ணீர் பற்றாக்குறை என்பது மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று” என்பதை வலியுறுத்தினார். மேலும் அவர் குறிப்பிடும்போது, ”விவசாயம் 75 சதவிகிதம் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் பங்களிப்பு செய்கிறது. இந்த விகிதத்தை மனதில் கொண்டு திறம்பட நீர் பயன்பாட்டு செயல்முறைகளை மேம்படுத்தி, தரிசுநிலங்களை… பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR-Corporate Social Responsibility) மூலம் பயிர் விளையும் நிலங்களாக மாற்ற முடியும் என நம்புகிறோம்” என்றார்.
ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான முனைவர். வை.செல்வம், ”தண்ணீரை அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பராமரித்து அதை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார், மேலும் அவர் பேசும்போது, ”வடிநிலப்பகுதிகளில் இருக்கும் நீரை, தண்ணீர் தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த வகையான முயற்சிகளுக்கு எங்களுக்கு பங்காளர்கள் தேவைப்படுகிறார்கள். வேளாண்மை மற்றும் விவசாயத்திற்குத் தண்ணீர் வழங்குவதில் வபேக் நிறுவனம் ஆர்வமாக உள்ளது” என்றார்.
2015-ல் விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 160 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கான கிணறுகளைப் புதுப்பிக்க வபேக் மற்றும் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டன. இந்தப் பகுதியில் பாசனத்திற்கு திறந்தவெளி கிணறுகள் பொதுவானதாக இருந்தாலும் 65 சதவிகித கிணறுகள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அழிக்கப்பட்டன. இந்த கிணறுகள் வபேக் பங்களிப்புடன் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அக்கிணறுகளில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி நிறைய நிலங்களை பயிர் செய்யும் நிலங்களாக மேம்படுத்தப்பட்டன. இதனால் அதிகமானது விளை நிலங்களின் எண்ணிக்கை, அதன் தொடர்ச்சியாக பயிர்களின் உற்பத்தியும் அதிகரித்தது, விவசாயிகளின் கூடுதல் ஆதரவுக்காக சுழல்நிதி ஒன்றும் துவங்கப்பட்டது.
இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நுண்ணியல் பாசன தொழில்நுட்பங்களுக்கு 65 லட்சம் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் இப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை சீர் செய்யும் பணியில் இறங்கப்போகிறோம். பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களை நுண்ணிய நீர் பாசனம் மூலம் பயிரிட்டு அதிக நிலப்பரப்பில் விளைச்சலை அதிகரிப்போம். அதற்கு திறந்த வெளி கிணறுகளை சீர் செய்து, நீர் மேலாண்மையை திறம்பட செயல்படுத்தி, நவீன தொழில்நுட்பத்துடன் மறுசுழற்சி மூலம் நீரைச் சேமித்து, வறட்சியான காலங்களில் அந்நீரை பாசனத்திற்குப் பயன்படுத்துவதே எங்களுடைய நோக்கமாகும்.