கணிதமேதை ராமானுஜத்தின் 130 பிறந்தநாளை (22.12.1887) முன்னிட்டு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கணிதமேதை ராமானுஜம் பற்றிய நாடக தயாரிப்புகள்- ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கிருஷ்ணசுவாமி அல்லாடி பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் துவக்க உரையில் கணிதமேதை ராமானுஜத்தை அழகான முறையில் சித்தரித்து திரைப்படங்களும், நாடகங்களும் வெளிவந்திருக்கின்றன எனக் குறிப்பிட்டு அவற்றில் உள்ள சிறப்புகளை ஆராய்ச்சி செய்து சுட்டிக்காட்டி பகிர்ந்து கொண்டார்.
”ஒவ்வொரு எண்ணிற்கும் அதற்கே உரித்தான சிறப்புத்தன்மை கொண்ட சொந்தமான தனிக்குணம் உண்டு. அந்தத் தனித்தன்மை ராமானுஜத்திற்கு நன்கு தெரியும் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த காட்பிரே ஹெச். ஹார்டி என்ற கணித வல்லுநர் குறிப்பிட்டிருக்கிறார். ராமானுஜன் 1729 என்ற எண்ணைப் பற்றிய சிறப்பு குணத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ”இரண்டு எண்களின் மூன்றடுக்கு எண்களின் கூட்டுத்தொகையாக வரும் விடை எண்ணான 1729-தான் மிகவும் சிறிய நிறை முழு எண்ணாகும்- (Smallest positive integers) இந்தப் பண்பு உள்ள எண்ணை ‘ராமானுஜன் எண்’ என்று அழைக்கிறோம். அதன்படி 1729 என்ற எண்தான் மிகவும் குறைவான மதிப்புடைய ராமானுஜன் எண்ணாகும்.
‘ராமானுஜன் ஒரு சிறந்த மனிதர்’- (A First class man) என்ற நாடகத்தில் ராமானுஜன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்ததால் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறை அவரைக் கைது செய்ய வருகிறது. அப்போது ஹார்டி குறுக்கிட்டு ராமானுஜத்தைக் காட்டி இவர், ‘ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி’ என்ற பட்டம் பெற்றவர் எனக்கூறி, அவரைக் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுகிறார். ஆனால் அந்தச் சமயத்தில் ராமானுஜன் அந்தப் பட்டத்தைப் பெறக்கூடிய நிலையில்தான் இருந்தார். ஒரு நல்ல விஷயம் நடப்பதற்கு பொய் கூறுவதில் ஒன்றும் தவறில்லை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஹார்டி அவ்வாறு கூறி ராமானுஜத்தைக் காப்பாற்றுவதாக அந்த நாடகம் காட்டப்பட்டிருந்தது. பின்னாளில் ராமானுஜமே அந்த கெளரவத்தை இங்கிலாந்து அரசிடமிருந்து பெற்றார்.
அதே நாடகத்தின் மற்றொரு பகுதியில் ராமானுஜத்தின் நண்பரான இந்திய இளைஞனுக்கும் இங்கிலாந்து பெண்மணிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒருமுறை ராமானுஜம் அவருடைய வீட்டுக்குச் செல்லும் போது அந்தப் பெண் ஒரு சிற்பி எனக்கூறி ராமானுஜத்தை சிலையாக வடிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் உண்மையில் அந்தப் பெண்ணின் சமையலை புகழ்ந்து அவரைப் பாராட்டியது மட்டுமே உண்மை!” என பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் சுவாமிநாதன் அனைவருக்கும் நன்றி கூறி, ”டிசம்பர் மாதம் என்றாலே, சங்கீதமும், பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடியின் இந்திய வருகையும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது” என்றார்.