சென்னை 16, 2018: நிலைத்த நீடித்த வேளாண்மை குறித்த கருத்தரங்கு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இதில் பறவைகளிடமிருந்து ஒலியியலைப் பயன்படுத்தி பயிர்களைக் காக்கவும், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேப்ப விதைகளைக் கொண்டு உரங்களைத் தயாரிக்கும் குஜராத்தில் அமைந்திருக்கும் ஜி.என்.எஃப்.சி (GNFC) நிறுவனமும் பங்கெடுத்தது. இந்நிகழ்வில் இரண்டு நிறுவனங்களும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதில் கையெழுத்திட்டது.
நிகழ்ச்சியின் முதலில் ஒலியியலைக்கொண்டு பறவைகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் யுக்தி ஒன்றை க்ருஸ் சூழல் அறிவியல் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் மகேஷ் வடிவமைத்திருந்தார். அதுகுறித்து அவர் கூறியதாவது, ”பறவைகளிடமிருந்து பயிர்களைக் காப்பது மனித வர்க்கத்தினருக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே காணப்பட்டது. பறவைகள் ஏற்படுத்தும் ஒலிகளுக்கு எழுத்துக்கள் கிடையாது. அவை மூன்று விதமான ஒலிகளை மட்டுமே உண்டாக்குகின்றன. அவை மனிதர்கள் மூலமோ, மற்ற விலங்கினங்கள் மூலமோ ஆபத்து வருகிறது என எச்சரிக்கைக் குரலை அறிவிப்பது, மற்றொன்று அபாயக் குரல், இறுதியாக இரை உள்ளது என மற்ற பறவைகளுக்கு அறிவிப்பது. இதில் மனிதர்களால் கேட்கமுடியாத பறவைகளின் குரலை பதிவு செய்து அறுவடை செய்ய இருக்கும் பயிர்களுக்கு இடையே வைத்துவிட்டால் பயிர்களை அழிக்கும் பறவைகள் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுகின்றன.
இதன் மூலம் மஹாராஷ்டிராவில் அதிகளவில் வசிக்கும் நீல்கை மானினங்களை விரட்ட சிறப்பு ஒலிகளை அலறவிட்டதில் நிறைய நீல்கை மான்கள் பயிர்களைச் சேதப்படுத்தாமல் ஓடிவிடுவதை காணொளிக் காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. அதேபோன்று மேற்கு வங்கத்தில் யானைக் கூட்டங்கள் பயிர்களை அழிப்பதால் இந்த சிறப்பு ஒலியின் மூலம் யானைகளை விரட்டுவதும் காண்பிக்கப்பட்டது. இதை ரயில்வே துறையும் பயன்படுத்தி நிறைய யானைகளை அழிவிலிருந்து காத்து வருகின்றது. வித்தியாசமான ஒலிகளை ஏற்படுத்தும் இந்த சாதனம் சூரிய ஒளியில் இயங்கக்கூடியது. இதை வடிவமைக்க ஒரு சாதனத்திற்கு ஏறக்குறைய முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். உருவத்தில் பெரிதாக இருக்கும் விலங்கினங்கள் இந்த ஒலியைக் கேட்டு சிறிது நேரம் கழித்தே அவை அந்த இடத்தை விட்டு விலகுகின்றன. ஆனால் அதை விட உருவத்தில் சிறிதான நீல்கை மானினங்கள் உடனே ஓடுகின்றன. பறவைகள், புறாக்கள் ஆகியவை மெலிதான ஒலியைக் கேட்ட மாத்திரத்திலேயே பதறித் துடித்து அந்த இடத்தை விட்டுப் பறந்துவிடுகின்றன. இந்தச் சாதனத்தை ஹரியானா பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் பறவைகளிடமிருந்து பயிர்களைக் காக்கலாம். யானைகளின் அழிவையும் குறைக்கலாம். மேற்கு வங்கத்தில் ரயில் போகும் பாதையில் இதை அமைத்திருப்பதால் யானைகள் பெருமளவில் காப்பாற்றப்பட்டுள்ளன” எனக் கூறினார் மகேஷ்.
நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக வேப்ப விதைகளின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து அளிக்கும் ஜி.என்.எஃப்.சி (GNFC) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ராஜிவ்குமார் குப்தா (இ.ஆ.ப) தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”கிராமப்புறத்தில் வசிக்கும் நிலமற்ற விவசாயிகள், குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையவும் வேப்ப விதைகளைக் கொண்டு, நீம் எண்ணெய், சோப், ஷாம்பு, இயற்கை உரம், கை சுத்தம் செய்யும் திரவம் என நிறைய தயாரிப்புகளைத் தயாரித்து அளிக்கிறோம். இந்த தயாரிப்புகளுக்கான வேப்ப விதைகளைச் சேகரித்துக் கொடுப்பவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வருமானம் அளிப்பதோடு அதிக லாபமும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இத்தகைய வேப்ப புரட்சி மூலம் கடந்த மூன்று வருடத்தில் நான்கரை லட்ச கிராமப்புற பெண்கள் 45 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளனர்.” என்றார் ராஜிவ்குமார் குப்தா.
நிகழ்ச்சியின் இறுதியில் ம.சா.சுவாமிநாதன் தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”இயற்கையோடு ஒருங்கிணைத்து வாழ்வதற்கு விவசாயிகளுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது விலங்குகளும், பறவைகளாலும் அதிக பயிர்கள் சேதமாகின்றன. இதற்கான தீர்வாக மகேஷ் அளித்த யுக்தியைப் பாராட்டினார். கிராமப் பகுதி பெண்களை மேம்படுத்த வேப்ப விதைகளின் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களைத் தயாரிக்கும் ஜி.என்.எஃப்.சி. நிறுவனத்திற்கு நன்றி கூறினார்” ம.சா.சுவாமிநாதன்.