சென்னை, ஜனவரி 9, 2018: தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகமாக முன்னேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என பேராசிரியர் ம.சா.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்தார். ஊட்டச்சத்து புரட்சியை நோக்கி நகரும் இந்தபணிக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு அமல்படுத்துவது அவசியம் எனக் கூறினார்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், யுனிசெஃப்புடன் இணைந்து கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை (9.1.18) செவ்வாய் அன்று நடத்தியது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பேராசிரியர் சுவாமிநாதன் தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”நம்மிடம் போதுமான அளவு உணவு இருக்கிறது. ஆனால் பிற பிரச்சனைகள் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு என்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ”உருளைக்கிழங்கு சிறந்த பயிர். ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தில் அதிகமாகப் பயிரிட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைச் சரியாகத் திட்டமிடாமல் பயிரிட்டதன் விளைவால் ஏற்பட்டது. ஆனால் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து நல் வழியில் செயல்பட்டு ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்கி தமிழ்நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டும்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து துறை’, அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் சார்ந்த தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க முன்னெடுத்துச் செயல்பட வேண்டும். இதன் முக்கிய குறிக்கோள்… அறிவு பகிர்தல் மூலம் மாநிலத்தில் ஊட்டச்சத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க வேண்டும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள பெண்களில் (15 வயது முதல் 49 வரை) 55 சதவிகிதத்தினர் ரத்தசோகை குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்” என பேராசிரியர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுனிசெஃப் நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ஃபர்ஹத்சையது கலந்து கொண்டார். தன் உரையில் அவர் பேசியதாவது, ”ஊட்டச்சத்து தொடர்பான அரசாங்க சேவைகளுக்கான தேவையை உருவாக்குவதற்கு சரியான நேரம் இது. ஊட்டச்சத்து பல பிரிவுகளாக இருப்பதால் அரசால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். இது ஊட்டச்சத்தைப் பாதித்தாலும் வரவிருக்கும் நாட்களில் இதற்கு முன்னுரிமை கிடைக்கும் என்பது நிச்சயம்” என்றார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்வம் தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”யுனிசெஃப்புடன் இணைந்து பணியாற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. பலதரப்பட்ட மக்களையும் வளங்களையும் ஒன்றிணைப்பதில் துவங்கி ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க செயல்படுவதில் முனைப்புடன் ஈடுபட்டு அதை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும்” என அவர் கூறினார்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுத் துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் திறனாய்வு மதிப்பீட்டில் இருந்து கிடைத்த முடிவுகள் வழங்கப்பட்டன. இம்முடிவுகள் முறையான அறிவு பகிர்வு, செயல்பாடுகளில் இடைவெளி மற்றும் பல்வேறு பங்காளர்களிடையே அறிவைப் பகிர்ந்து கொள்ளும் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு தகவல் பரிமாற்றத்திற்கான வழிமுறைகளும் பயிற்சியும் தேவைப்படுவதாக பங்காளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் கலந்தாய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு திட்ட கமிஷன் ஆணையத்தின் துறைத் தலைமை (விவசாயம்) முனைவர் ஜெகன்மோகன், தமிழக அரசின் சுகாதார இயக்குநரகத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மருத்துவத்துறை,, தமிழ்நாடு திட்ட கமிஷன் ஆணையம், சமூகநலத்துறை, கிராம அபிவிருத்தி துறை, தேசிய கிராமப்புற வாழ்வு, விவசாய ஆராய்ச்சியின் இந்திய கவுன்சில் அமைப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஊட்டச்சத்து பற்றிய இணையதளத்தை காண்பித்ததுடன், அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் அந்த இணைய தள முகவரியான tamilnadunutrition.org – யைப் பயன்படுத்தும் முறையும் அறிவிக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த தகவல்களை வரும் காலத்தில் தமிழில் கொண்டு வர தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் மூலம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது.