சென்னை ஜூன் 20, 2018: மனிதகுலத்திற்கு ஒப்பற்ற பங்களிப்பு அளித்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மத்திய பிரதேசம் குவாலியரில் அமைந்திருக்கும் ஐடிஎம் பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டம் (Doctor of Letters- D.Lit) வழங்கி கெளரவித்தது. இந்த சிறப்பு பட்டமளிப்பு விழா இன்று சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர். கமல் காந்த் துவேதி, பதிவாளர் டாக்டர் ஓம்வீர் சிங், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் செயலர் டாகடர் டி. ராமசாமி மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வை.செல்வம், முன்னாள் இயக்குநர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையில் ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். கமல் காந்த் துவேதி குறிப்பிட்டதாவது, ”ஐடிஎம் பல்கலைக்கழகம் 2011-ல் துவங்கப்பட்டது. முதன் முதலாக பல்கலைக்கழகத்திற்கு வெளியே வந்து இந்தச் சிறப்பு கெளரவ டாக்டர் பட்டத்தை பேராசிரியர் சுவாமிநாதனுக்கு வழங்குகிறது. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதை இங்கு நான் கூற விரும்புகிறேன். கல்வி கற்பது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டும் படிப்பதல்ல… அவ்வாறு கற்றதை அறிவின் மூலம் சிந்திக்க பயிற்சி எடுப்பதே சிறந்த கல்வி. அது தன்னலமற்ற தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மற்றவர்களுக்கு உதவியாகச் செயல்படுவதில்தான் முழுக் கல்வி கற்றதன் பயனை அடைய முடியும்.
பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது, ”எங்கு பிரச்சனை இருக்கிறதோ அங்கு அனைத்துக்கும் தீர்வும் இருக்கிறது. ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் வேளாண் பட்டதாரிகளை உருவாக்குவதாகக் கூறினார்கள், நாட்டிற்கு எல்லைப்படை வீரர்கள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நிலத்திற்கு விவசாயப் பட்டதாரிகள் முக்கியம். நிலைத்த நீடித்த வேளாண்மைக்கு நான்கு ‘சி’ (C)-க்களை நான் பரிந்துரைக்கிறேன். அதாவது பாதுகாப்பு, சாகுபடி, வணிகம் மற்றும் நுகர்வு (Conservation, Cultivation, Commerce, Consumption). இவற்றின் மூலம் பசியில்லா சமூகத்தை உருவாக்க முடியும். ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் படித்து முடிக்கும் ஆயிரம் வேளாண் பட்டதாரிகளும் இந்நாட்டின் நிலையான வேளாண் வளர்ச்சிக்குப் பாடுபடும் படை வீரர்களாகப் பார்க்கிறேன்.
சமூக, பாலினம், பொருளாதாரம், நெறிமுறை ஆகியவற்றின் நான்கு பரிமாணங்களைக் குறிப்பிடுகையில் நெறிமுறை மிகவும் முக்கியமானது. குறிப்பாக புதிய கண்டுபிடிப்புகள் காப்புரிமையைக் கொண்டிருப்பதோடு நிறுவனங்கள் சமநிலையைப் பராமரிப்பதற்கு அதற்கான இடத்தையும் அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோல்டன் ரைஸ் (Golden rice)… இதன் காப்புரிமை விஞ்ஞானிகளிடமிருந்து சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வாங்கப்பட்டது. பின்னர் அனைத்து வளரும் நாடுகளுக்கும் இந்த காப்புரிமையை பெயரளவுக்கு கட்டணமோ அல்லது இலவசமாகவோ அளித்து வருகிறது. இதை உதாரணமாகக் கொண்டு மற்ற நாடுகளும் பின்பற்றலாம். வேளாண் விளைச்சலுக்கு பல்லுயிர் பாதுகாப்பும் முக்கியமானது. இப்போது பயிரிடப்படும் ஆயிரக்கணக்கான அரிசி ரகங்கள் விவசாயிகளால் உருவாக்கப்பட்டவை, அதிலும் குறிப்பாக பெண் விவசாயிகளால் பயிரிடப்பட்டவை. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோயிலில் ஒரு பெண்ணின் உருவப்படம் உள்ளது. அங்குள்ள மக்கள் அந்தப் பெண்மணியை சாகுபடி செய்ய அரிசியை அறிமுகப்படுத்தியதாகக் கருதுகின்றனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் செயலர் ராமசாமி கூறியதாவது,
மக்களை மையப்படுத்திய விஞ்ஞானத்தை உருவாக்குவதன் அவசியத்தை பேராசிரியர் சுவாமிநாதன் வலியுறுத்துகிறார். அதன் அடிப்படையிலேயே தன் ஆராய்ச்சி அனைத்தையும் முன்னெடுத்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தூக்கத்தில் வருவது கனவல்ல…. உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு! அதுவே உங்களுடைய லட்சியமாக இருக்கட்டும்.
இந்நிகழ்ச்சியில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ஓம் வீர் சிங் நன்றி கூறினார்.