செப்டம்பர் 2017: ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் யுனிசெஃப் இணைந்து, ‘தமிழ்நாட்டில் சிறந்த ஊட்டச்சத்துக்கான அறிவு மேலாண்மை’ குறித்து கருத்துகள் பகிர்வுக்கான நிகழ்ச்சியை இரண்டு நாட்கள் புதுச்சேரியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் யுனிசெஃப், ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் முதன்மை சுகாதார இயக்குநகரம், தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சி மேம்பாட்டுத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்துத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உட்பட பல பிரதிநிதிகள் இந்தப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில திட்ட கமிஷன் அதிகாரி முனைவர் கே.ஆர். ஜெகன்மோகன் தன் உரையில், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, வரகு, ஆகிய உணவுகளுடன் பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக, தெளிவாக விளக்கிக் கூறினார். ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சி மேம்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் யமுனா ராணி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எந்த வகையில் ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை விரிவாக விளக்கமளித்தார். குழந்தைகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் அரசின் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கூறினார்.
முதன்மை சுகாதார இயக்குநகரத்தின் டாக்டர். எம். சங்கீதா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். ஒரே வீட்டில் பிறந்திருக்கும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் கிடைப்பதாகவும், இந்த நிலை மாற வேண்டும் எனக் கூறினார். அதே துறையில் வந்திருந்த டாக்டர். வி.அசோக், வைட்டமின்கள் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறித்தும், குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் வரக்கூடிய நோய்கள் பற்றியும் இவை வராமல் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் முதன்மை அதிகாரி தீபா ராஜ்கமல் ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகளின் தேவையை, குறிப்பாக கிராமப்புற பெண்களின் மூலம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை செயல்படுத்த முடியும் என்பதை விவரித்தார். ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஊடகவியலாளர் பி.ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறித்து ஆவணங்கள் தகவல் தொடர்புக்கான ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற தகவல்கள் அறிய tamilnadunutrition.org என்ற இணையதள முகவரியைப் பற்றி விளக்கினார்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் முனைவர் ஷெரீஃப்பா தல்ஹா மற்றும் முனைவர் மீனாட்சி பஜாஜ் எந்தெந்த உணவுகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதையும் ஊட்டச்சத்தின் மேன்மை குறித்தும் எளிய முறையில் தெளிவான நடையில் விளக்கமளித்தனர்.
பூம்புகாரில் இயங்கிவரும் ‘அனைவருக்கும் மீன் உணவு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய’த்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் வேல்விழி, மீன்களைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி விளக்கமளித்தார். ‘மத்திய அரசு நிறுவனமான உவர்நீர் மீன் வளர்ப்புத்துறை’யின் முதன்மை விஞ்ஞானி முனைவர் அம்பா சங்கர், மீன்களில் உள்ள சத்துக்கள் பற்றியும் மேலும் மீன் உணவை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பட்டியலிட்டார். இறுதியாக யுனிசெஃப்பின் ஊட்டச்சத்து நிபுணரான முனைவர் ஃபர்ஹத் சையது ஒவ்வொரு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென கூறியதோடு, தேவை அறிந்து செயல்பட்டால், நம் இலக்கான ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் எனக் கூறினார்.