விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைந்து பார்க்க வேண்டும் - வெங்கய்ய நாயுடு கருத்து

 

சென்னை, ஜூலை 29, 2018: சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்துக்கான விவசாய முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் வை.செல்வம், உணவுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் முனைவர் ஆர்.ருக்மணி ஆகியோரும் இரண்டாம் பகுதியில் தேசிய மழை நீர்ப்பகுதி ஆணையத்தின் (Natonal Rainfed Area Authority) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோக் தல்வாய், டாடா டிரஸ்டின் நிர்வாகி ஆர். வெங்கட்ரமணன், ஒடிஷா அரசின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., புவனேஸ்வரில் அமைந்துள்ள இந்திய கவுன்சில் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எம். நெடுஞ்செழியன், புனாவில் அமைந்துள்ள இந்திய கவுன்சில் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் விவசாய தொழில்நுட்பப்பிரிவின் இயக்குநர் முனைவர் லக்கன் சிங், ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் லான்சா துறையின் ( லான்சா - LANSA- Leveraging Agriculture for Nutrition in South Asia) இயக்குநர் முனைவர் ஆர்.வி. பவானி ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் துவக்க உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் பேசியதாவது,

விவசாய முறை என்பது நல்ல வேளாண் நடைமுறைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். நிலத்திலுள்ள மண் மூலம் நல்ல பயிர்களை விளைவிக்க முடியும். நல்ல பயிர்களின் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். பசுமை புரட்சி கலோரி குறைபாடுகளை கவனத்தில் கொள்கிறது. செயல் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமானது. நீர்ப்பற்றாக்குறை சம்பந்தமான பிரச்சனைகளோடு புரதச்சத்து, நூண்ணூட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தன் உரையில் பேசியதாவது,

ஊட்டச்சத்திற்கான விவசாய முறைகள் என்பது தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகும். ஏனெனில், நமது நாட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையை வெற்றிகரமாகக் கடந்து, தற்போது நம்முடைய தேவைக்குப் போதுமான அளவில் உணவு தானியங்களை நாமே உற்பத்தி செய்து கொண்டுவருகிறோம். அதேநேரத்தில் இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் உணவு தானியங்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய பொது விநியோகத்திட்டத்தைப் (PDS- Public Distribution System) பரவலாக அமல்படுத்துகின்றோம்.

அதேசமயம், நமது நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. 2015-16-ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி (NFHS-4). இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 38.4 சதவிகிதம் பேர், வயதிற்கேற்ற உயரமில்லாதவர்களாகவும், 35.7 சதவிகிதம் பேர் எடைகுறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும், குழந்தைபெறும் வயதில் உள்ள பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் 'நாள்பட்ட ஆற்றல் குறைபாடுள்ளவர்களாக' இருக்கின்றனர். பாதிக்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் இரத்தசோகை உடையவர்களாக இருக்கின்றனர் என்று குடும்ப நல ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இதைப் பார்க்கையில் நாம் உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கு அதிகளவு முக்கியவத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் புரியும்.

தமிழகத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளாக, உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள் அனைவருக்கும் சகாய விலையில் கிடைப்பதற்காக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனர். ஆனால், அனைவருக்கும் போதுமான அளவு புரதச்சத்து கிடைப்பதற்கான முக்கிய மூலமான பருப்பு வகைகளை அதே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மூலம் சகாய விலையில் முதலில் வழங்கியது தமிழ்நாடுதான். அதுமட்டுமல்ல, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பருப்பு வகைகளையும் பாமாயிலையும் வழங்கியது தமிழ்நாடுதான். இதன் மூலம் ஆரோக்கியமான உடம்பிற்கு தேவையான புரதச்சத்தையும், கொழுப்புச் சத்தையும் ஏழை, எளிய மக்களும் பெற முடியும். இதன் மூலம், உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பானவர்களாக மக்களை மாற்றுவதற்கு PDS-யை உபயோகப்படுத்தியதில் முன்னோடி தமிழகம்தான். இவ்வாறு செயல்படுத்துவதால் ஏற்படும் செலவு, மத்திய அரசு தரும் நிதியை விட அதிகளவில் இருந்தபோதும், அந்தக் கூடுதல் நிதிச்சுமையை மாநில அரசு ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. 

ஊட்டச்சத்துப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகையில் சிறுவர்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் அவசியத்தை எல்லா வல்லுநர்களும் வலியுறுத்துகின்றனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பசியோடு பாடம் படிக்கக்கூடாது என மதிய உணவுத்திட்டமாக இருந்ததை, மாணவ/ மாணவிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக 1983-லேயே 'சத்துணவு திட்டத்தை' செயல்படுத்தியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசுதான். எனவே, ஊட்டச்சத்தை மேம்படுத்த மாநில அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் தாக்கத்தை ஊட்டச்சத்து தொடர்பான குறியீடுகளில் தமிழகத்தின் முன்னேற்ற நிலையைக் காண்பதன் மூலம் அறியலாம். மேலும், சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கும் விதமாக, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம் சிறு தானியங்களைப் பயிரிடப்பட்ட நிலங்களின் அளவு அதிகரித்துள்ளது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். எண்ணெய் வித்து பயிர்களில் முக்கிய பயிரான நிலக்கடலை பயிரில் 85 சதவிகிதம் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. சிறுதானியங்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது என தமிழக அரசின் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு தன் உரையில் குறிப்பிட்டதாவது,

ஐ.நா-வின் 2018-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கு ஜூன் 20, 2018-ல் வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் பசியின் எண்ணிக்கை கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக முதன்முறையாக உயர்ந்துள்ளனர் என்பது கவலை அளிக்கிறது. உலகில் பசி எண்ணிக்கை அதிகரிப்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். இந்தியாவில் ஊட்டச்சத்தின்மை நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. எனினும் அது கொள்கை விவாதங்களின் போது பின்னுக்குத் தள்ளப்படுகிறது.  எனவே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், விவசாயத்தை ஊட்டச்சத்துடன் இணைப்பதற்கான கருத்தைக் கொண்டுவர இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-ன் படி வளரிளம் மற்றும் பேறுகாலப் பெண்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்களுடைய நீண்ட கால ஆற்றல் குறைபாடு காரணமாக பாதிக்கப்படுவதாகவும் ஐந்தில் ஒரு பகுதியினர் பருமனாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் அடுத்தடுத்து வரும் அரசுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இருந்தபோதிலும் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின்  பிரச்சனை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. பெருந்தலைவர் காமராஜ் முதல் அமைச்சராக இருந்தபோது மதிய உணவுத்திட்டம் என்ற பெயரில் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. பின்னாளில் எம்.ஜி.ஆரால் அந்தத் திட்டம் சத்துணவுத்திட்டம் என்ற பெயரில் இன்றளவு நடைபெற்று வருகிறது. ஊட்டச்சத்தின்மைக்கு குறைவான, தரமற்ற உணவு உட்கொள்ளுதல், மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

அரசியலமைப்பின் 47-வது பிரிவின் படி அரசு, மக்களின் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் முதன்மைக் கடமைகளில் ஒன்று. மேலும் மக்களுடைய பொது சுகாதாரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்களுக்காக செயல்பட வேண்டும்.

இந்தியாவில் மூன்று வகையான ஊட்டச்சத்துகுறைபாடுகள் காணப்படுகின்றன.

உட்கொள்ளப்படும் உணவில் கலோரி குறைபாடு

பால் முட்டை போன்றவற்றில் புரதச் சத்து குறைபாடு

இரும்புச்சத்து, அயோடின், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மறைக்கப்பட்ட பசி) ஆகிய மூன்றுதான் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதில் இந்திய அரசு அக்கறையுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். செப்டம்பர் 2017-ல் தேசிய ஊட்டச்சத்து திட்டமுறை இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்னெடுத்தை இந்திய அரசு பின்பற்றி ஊட்டச்சத்தில்லா சமுதாயத்தை உருவாக்க முனைந்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது விவசாயக் கொள்கைக்கு அவசியமான தேவையாக விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைந்து பார்க்க வேண்டும். இன்று உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பிலும் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். அதே மாதிரி இந்த உணவு உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் நாம் பெற முடியும். ஊட்டச்சத்து சாகுபடியில் முக்கியமான  பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு உற்பத்தியை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல் மண்ணிற்கு ஊட்டச்சத்து மதிப்புகளை மீட்டெடுப்பதற்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை ஊக்குவிப்பதுடன், அத்தகைய பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவது அவசியம். பொதுவிநியோக அமைப்புகளின் மூலம் அவற்றை வழங்குவது நல்லது. ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இந்திய விவசாயக் கழகம் மற்றும் கிருஷி விக்யான் கேந்திரம் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்தின் மதிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு, சமுதாயம், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களும், ஊட்டச்சத்து நிறைந்தவர்களும் ஊட்டச்சத்து சார்ந்த உண்மைகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம் மக்களின் உணவு உற்பத்தியின் கண்காணிப்பு அவ்வப்போது கொள்கைகளில் தேவையான மாற்றங்களை அளிக்க அரசுக்கு உதவும். ஊட்டச்சத்து பாதுகாப்பு இலக்கை அடைய வேளாண்மையை மேம்படுத்துவது பேராசிரியர் சுவாமிநாதன் கூறிய கருத்துகளில் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இந்தியா போன்ற நாட்டில் கணிசமான பகுதியினர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரோக்கியமான மண்ணின் மூலம் நல்ல பயிர்களை உருவாக்கமுடியும். நல்ல பயிர்களின் மூலம் மக்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்க முடியும். அதே மாதிரி நல்ல கலாசாரத்தின் மூலம் நல்ல இயற்கையைப் பெற முடியும். நல்ல இயற்கையின் மூலம் நல்ல எதிர்காலத்தைப் பெற முடியும். ஆரோக்கியமே மஹா பாக்கியம் என்பது நம் முன்னோர்கள் கூறியது. ஆரோக்கியமான இந்தியா பின்னர் செல்வச் செழிப்பான இந்தியாவாக மாறும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வை.செல்வம் வரவேற்றார். தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்துக்கான விவசாயத்தை வலுப்படுத்துதல் ( லான்சா - Leveraging Agriculture for Nutrition in South Asia) துறையின் இயக்குநர் முனைவர் ஆர்.வி.பவானி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெருந்திரளான ஆராய்ச்சியாளர்களும்., விஞ்ஞானிகளும் அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இரண்டாம் பகுதியில் தேசிய மழை நீர்ப்பகுதி ஆணையத்தின் (National Rainfed Area Authority) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அசோக் தல்வாய், டாடா டிரஸ்டின் நிர்வாகி ஆர். வெங்கட்ரமணன், ஒடிஷா அரசின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., புவனேஸ்வரில் அமைந்துள்ள இந்திய கவுன்சில் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எம். நெடுஞ்செழியன், புனாவில் அமைந்துள்ள இந்திய கவுன்சில் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் விவசாய தொழில்நுட்பப்பிரிவின் இயக்குநர் முனைவர் லக்கன் சிங், ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் முனைவர் ஆர்.ருக்மணி, லான்சா துறையின் (லான்சா - LANSA- Leveraging Agriculture for Nutrition in South Asia) இயக்குநர் முனைவர் ஆர்.வி. பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 டாக்டர் அசோக் தல்வாய் தன் உரையில் குறிப்பிட்டதாவது,

''இந்திய நாடு உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் இன்றளவும் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் வேளாண் விவசாயிகள் பலரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர். 2013-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி விவசாயி ஒவ்வொருவரும் மாதத்திற்கு ரூபாய் 6426.00 மட்டுமே சம்பாதிக்கின்றனர். அதனால் விவசாயிகளுடைய வறுமை விட்டகலவேண்டும். அதற்குப் பின்புதான் நல்ல ஆரோக்கியமும், சிறந்த கல்வியும் பெறமுடியும். ஒருங்கிணைந்த விவசாய முறையின் மூலம் பருப்பு வகைகளையும், எண்ணெய் வித்துப் பயிர்களையும், ராகி, கம்பு, சாமை, திணை போன்ற தானியங்களையும் அவர்கள் பயிரிட வேண்டும். கலோரி, புரதச்சத்து, மற்றும் நுண்ணூட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க கிராமங்களில் வசிக்கும் பெண்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். ஏனென்றால் அவர்களால்தான் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொடுத்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும். உணவுப் பழக்கம், நல்ல ஆரோக்கியமான உடல்நலன்,  பாதிப்பில்லாத சுற்றுச்சூழல், சுத்தமான குடிநீர், சுகாதாரமான சூழ்நிலை இவை அனைத்தும் எல்லா தரப்பு மக்களுக்குத் தேவை என்றாலும் கிராமப்புற பெண்களுக்கு இதன் அவசியத்தைப் புரியவைக்க வேண்டும். ஊட்டச்சத்துப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் அதை சந்தைப்படுத்தலில் கவனம் செலுத்த வேண்டும். நுகர்வோர்கள் வாங்கும்விலையில் அந்தப் பொருள்கள் விற்கப்பட வேண்டும் என்பது அதைவிட முக்கியம்'' இவ்வாறு பேசினார். 

டாடா டிரஸ்டின் நிர்வாகி ஆர். வெங்கட்ரமணன் தன் உரையில் பேசியதாவது,

''என்னுடைய சிறுவயதில் ராகிமால்ட் என்ற பவுடர் இருக்கும், அது குறித்து நிறைய பேருக்கு இப்போது தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. பாரம்பரிய சிறுதானியங்களின் நன்மைகளை நாம் பின்பற்றினாலே போதும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதே இருக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குகிறோமா என்பதை உறுதி செய்யப்பட வேண்டும். வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து கொண்ட உணவை வழங்கி வருகிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பசுமைப் புரட்சியின் தந்தை பேராசிரியர் சுவாமிநாதன் ஆலோசனையின் படி இந்தியா உணவுப் பற்றாக்குறையிலிருந்து, தேவைக்குப் போக உபரியாக இருப்பதே அவருடைய வழிகாட்டுதலின்படிதான் இந்த நிலையை எட்டியிருக்கிறோம். வேளாண் முறையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.'' எனக்கூறி முடித்தார்.

ஒடிஷா அரசின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,

தன் உரையில் குறிப்பிட்டதாவது,

''ஒடிஷாவில் 40 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியினர். ஒடிஷா அரசு விவசாயத்தில் உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒடிஷா உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, வறுமை குறைப்பு மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்திருக்கிறது. ஒடிஷாவில் அரிசி உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. 80 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவந்திருக்கின்றனர். பசி பட்டினிக்கு எதிரான போரை எங்களால் வெல்ல முடிந்தது. இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டால் பல துறை மதிப்பீடுகளால் அந்தச் சோதனையை சமாளிக்கவும் எதிர்காலத்தில் எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஓட்ஸ் மிகச் சிறந்தது. ஒடிஷா மாநிலத்தில் ஓட்ஸை அதிகமான பேர் பயிரிட்டுவருகிறார்கள்.

இப்போது ஊட்டச்சத்து குறித்து அதிலும் குறிப்பாக கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். மேலும் எங்களுடைய அடுத்த நிதி நிலை அறிக்கையில் ஊட்டச்சத்து குறித்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதையும் உள்ளடக்கி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும். மேலும் ஒடிஷாவில் கம்பு, ராகி, கேழ்வரகு ஆகியவற்றை உணவாக எடுத்துகொள்வது தங்களுடைய கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுவதாகவும், தொடர்ந்து உண்ணுவது தாங்கள் இன்னும் ஏழையாக இருப்பதாக நினைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விடுபடவும், கிச்சன் கார்டனில் தங்களுக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, குடியிருப்பு, குடிநீர், ஆரோக்கியம், கல்வி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தி வருகிறோம். 'கிருஷி கர்மாண் விருது' தொடர்ந்து நான்கு வருடங்களாக (2011-2015) ஒடிஷா அரசு பெற்று வந்துள்ளது.'' எனக் கூறி முடித்தார்.

இந்திய கவுன்சில் விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எம். நெடுஞ்செழியன் தன் உரையில் குறிப்பிட்டதாவது,

''நாம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டோம். ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பை செய்யவில்லை. கலோரிசத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்து, கனிமச்சத்து, ஆகியவை அடங்கிய சிறுதானியங்களை நாம் எடுத்துக்கொள்ளாமலே இருக்கிறோம். அதனால்தான் ஊட்டச்சத்து பற்றாக்குறை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது.

ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு (வீட்டுக்குத் தேவையான) கிழங்கு பயிர்கள் அடிப்படையிலான பயிர்முறையின் மூலமாக கிழங்கு வகை பயிர்களை ஒடிஷா மாநிலத்து மக்கள் பயிரிட்டு வருகிறார்கள். இந்தப் பயிர்களிலும் கனிமச்சத்துக்கள், கலோரிச்சத்து, வைட்டமின் சத்து என எல்லா சத்துக்களும் இந்தவகை கிழங்குப் பயிர்களில் அதிகம் உள்ளன. அதில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, யாம் என்ற வகை கிழங்கு, அராய்ட்ஸ், யானைக்கால் கிழங்கு, டாரோ கிழங்கு, டானியா கிழங்கு, ஆரோரூட் கிழங்கு என பல கிழங்கு வகைகளை இங்குள்ள மலைவாழ் மக்கள் பயிரிட்டு வருகின்றனர். அரிசி, கோதுமையை விட அதிக அளவு நார்ச்சத்தும் (ஃபைபரும்), கனிமச்சத்தும் இந்தவகை கிழங்குகளில் அதிகம் இருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் தைரியமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் ஏனோ மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்பட கிழங்கு வகைகளை (பூமிக்கு அடியில் வளரும் கிழங்குகளை) பரிந்துரை செய்வதில்லை. யானைக் கால் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டும் அதிக நார்ச்சத்து கொண்டவை. நீரிழிவு குறைபாடுள்ளவர்கள் இந்த வகை கிழங்குகளை உட்கொள்ளலாம். பயிர் சாகுபடியிலும் அரிசி, கோதுமையை விட அதிக அளவு மகசூலும் இந்த வகை கிழங்கு வகைப் பயிர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்குப் பிடித்தமான சிப்ஸ் கிழங்கிலிருந்து நேரடியாகவும், பூரி, சப்பாத்தி, கேக், குலோப் ஜாமுன் முதலியவை இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பவுடரில் இருந்து தயாரிக்கலாம்'' இவ்வாறு நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.

 

 

 
Share