பயிர் காப்பீடு நிறுவனங்கள் வேளாண் தொழில் செய்பவர்களுடன் இணைக்கப்பட வேண்டும்

சென்னை ஜூலை 11, 2018: இந்தியாவின் பயிர் காப்பீட்டுத் திட்டங்களின் சூழலில் வேளாண் இடர் மேலாண்மைக்கான புதுமையான தீர்வுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று சென்னை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமெரிக்காவின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி மாணவி டாக்டர் பெர்பெர் க்ரேமர் உரையாற்றினார்.

 

அவருடைய உரையிலிருந்து, ''பருவநிலை மாற்றம் வேளாண் உற்பத்தி நிலையை அதிகரிக்கவோ குறையவோ செய்துவிடுகிறது. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற திட்டம் இந்தியாவின் முக்கிய விளைச்சல் சார்ந்த பயிர் காப்பீடு திட்டம். 

 

விவசாயிகள் பயிர் விளைச்சலின் போது அதாவது விதைக்கும் விதைப்பிலிருந்து அந்தப் பயிர் அறுவடை செய்யப்படும்வரை எடுக்கப்பட்ட படங்களை வைத்து காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் இழப்பு மதிப்பீடு செய்யப்படுவதால் அவர்களுடைய அபாயங்கள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் எடுக்கப்பட்ட நிலவரப்படி தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் கைபேசியில் படங்கள் எடுப்பதைத் தவிர்க்கும் நிலை உள்ளது. ஏனென்றால் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கல்வி, கைபேசியில் அவர்களுடைய அனுபவமின்மை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. பயிர் நஷ்டத்தைக் குறைக்கும் தீர்வாக நெல் அல்லது கோதுமைக்குப் பிறகு பயிர் சுழற்சி அடிப்படையில் கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களைப் பயிரிடலாம். அறுவடைக்குப் பின் இருக்கும் பயிர் எச்சங்களை எரிக்காமல் அதில் 'ஹேப்பிசீடர்' கருவி மூலம் பயிருக்கான விதையையும் விதைக்கலாம். தொழில் நுட்ப மெஷினரி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் இருவரும் இணைந்து செயலாற்றினால் விவசாயிகளின் நஷ்டம் குறைக்கப்படும். அறுவடைக்குப் பின் உண்டாகும் பயிர் எச்சங்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடியும். 

 

கருத்தரங்கின் நிறைவுரை வழங்கியவர் துவார அறக்கட்டளையின் தலைவர் சமீர் ஷா. தன் உரையில் குறிப்பிட்டதாவது, ஒவ்வொரு பயிரையும் தனித்தனியாக பயிரிடாமல் முழுமையான அணுகுமுறையை மேற்கொண்டு சாகுபடி செய்தால் பயிர் நஷ்டத்தைக் குறைக்க முடியும். பயிர்களுக்கு நஷ்டம் வருமோ என்று கவலைப்பட்டு பயிர் காப்பீடு செய்வதை விட, பயிர் காப்பீடு என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் என நினைத்து பயிர் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

 

நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Share