சென்னை, ஏப்ரல் 15, 2018: சென்னையில் அமைந்திருக்கும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்புடன், ‘சிறுதானியங்கள், பருவநிலை மற்றும் சந்தை ஆகியனவற்றைக் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏப்ரல் 15-17 ஆகிய மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், தலைவர் மதுரா சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் வை.செல்வம், பயோவெர்சிட்டி இண்டர்நேஷனல் இந்தியாவின் மண்டலப் பிரதிநிதி முனைவர் கிருஷ்ணகுமார், விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி புதுடெல்லியின் இயக்குநர் முனைவர் ராஷா யூசுஃப் ஓமர், உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி பிரதிநிதி முனைவர் கொண்டா ரெட்டி சாவா, தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அமைச்சர் துரைக்கண்ணு தன் உரையில் குறிப்பிட்டதாவது, ”பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இவ்விரண்டும் நமக்கு முன்னே உள்ள சவால்கள். இவ்விரண்டு சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் நமது பாரம்பரிய தானியங்களான சிறுதானியங்களுக்கு உண்டு. இதனால்தான் 2018- ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
நாம் பயிரிட்ட கேழ்வரகு, சாமை, திணை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகிய பயிர் வகைகள் நமது பாரம்பரிய விவசாய முறைக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. இது மண் வளம் குறைந்த, மலைப்பாங்கான, குறைந்த மழை வளம் பெறும் பகுதிகளில் சிறுதானியங்கள் வளரும் தன்மை கொண்டவை. நம் ஆரோக்கியத்திற்குத் தேவையான நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, போலிக் அமிலச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் இந்த சிறுதானியங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் சிறுதானியங்களை அரைப்பதற்கான இயந்திரங்கள் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நீடித்த மானாவாரி விவசாயப் பயிர் மேம்பாட்டு சிறப்புத் திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தியைப் பெருக்க பயிரிடும் பரப்பை 25 லட்சம் ஏக்கராக படிப்படியாக உயர்த்த 802.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுப்பண்ணை விவசாயம் செய்ய தமிழக அரசு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பேராசிரியர் சுவாமிநாதன் தன் உரையில் கூறியதாவது,” வேளாண்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் விவசாயமானது அவர்கள் துவக்கத்திலேயே முன்னெடுத்து செய்து வந்த தொழில். பாரம்பரிய முறைப்படி உணவுப்பயிர் மற்றும் தீவனப் பயிர் என பல்வேறு விதமான பயிர்களை பயிரிட்டு வந்தோம். ஆனால் நவீன நடைமுறைகளால் நிறைய பயிர்களை இழந்துவிட்டோம். விவசாயத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துக்கான பொது கொள்கை ஆகியவற்றை செம்மைப்படுத்துவதன் மூலம் இளைஞர்களை விவசாயத்தில் தக்கவைத்துக் கொள்வதற்கு தகுந்த விலையிடல் கொள்கையும் சேர்த்து பயிர்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் இளைஞர்களை ஈர்க்கலாம். சிறுதானியங்களை பொதுவிநியோகத்திட்டத்தின் வழங்கவும், பள்ளிகளில் அளிக்கப்படும் மதிய உணவில் சேர்க்கவும் உறுதியான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கூட்டமைப்பு உறுப்பினர்கள், செய்தியாளர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அருகில் சிறு தானிய விதைகள், கருவிகள், மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வை.செல்வம் வரவேற்றார். இறுதியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இஸ்ரேல் ஆலிவர் கிங் நன்றி கூறினார்.