மதிய உணவில் மாடித்தோட்ட காய்கறிகள்!
கிராமப் பகுதியில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளியமுறையில் வீட்டுத்தோட்டம் அமைத்துப் பராமரிக்க முடியும் என்கிறார் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் ப்ரியா. தன் வீட்டு மாடிப்பகுதியில் தோட்டம் அமைத்து அதில் கிடைக்கும் காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் தனக்குப் பயன்படுத்திக் கொண்டு எஞ்சியவற்றை தன் நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று மாடித்தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இது பற்றி மேலும் அவர் கூறியதாவது, ”மாடியில் காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில் முதலில் மாடிப்பகுதியில் அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படியான நீர் வெளியேற்றுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்யவேண்டும். செடிகளை வளர்க்கும் தொட்டியில் தென்னை நார்க்கழிவு பயன்படுத்தினால் நீர் அதிகமாக வெளியேறாது. மேலும் மாடியில் ஒரு அடிக்கு இரண்டு செங்கல் வீதம் வைத்து அதற்கு மேல் மரத்தினால் ஆன சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் வைத்து அதற்கு மேல் செடி தொட்டிகளை வைத்தால் மாடியிலுள்ள தரை எந்தவித பாதிப்பும் அடையாது. தண்ணீர் தேங்காமல் வெளியேறிவிடும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் தோட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும். தேங்காய் நார்க்கழிவுகளை பயன்படுத்துவது நல்லது. கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை நட்டு வைக்கலாம். இலைகளை மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம்.
கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரங்காய், ஆகிய செடிகளை மாடியில் வளர்க்கலாம். மாடித்தோட்டத்திற்கு நாட்டு காய்கறிகள் மிகச் சிறந்தவை. வெண்டை, மிளகாய், கொத்தவரங்காய், கத்தரி ஆகியவற்றை சின்ன பைகளில் நேரடியாக விதைக்கலாம். பீர்க்கை, புடலை ஆகியவற்றை பந்தலிட்டு படரவிடவேண்டும். அரசு தோட்டக்கலைத் துறையில் விதைகள், தென்னைநார்க்கழிவு, நுண்ணூட்டச்சத்துக்கள் கொண்ட பைகளையும் தருகிறார்கள். அதைப் பின்பற்றி தோட்டம் அமைத்தாலே போதும். நம் வீட்டுக்குத் தேவையான அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் நம் வீட்டு மாடியிலேயே பெற்றுக்கொள்ளலாம். என் வீட்டு மாடியில் ஆயிரம் சதுர அடியில் 450 வகையான செடிகளை வளர்த்துப் பராமரித்து வருகிறேன்.
கீரை வகைகளை பத்து அல்லது பதினைந்து நாட்கள் பராமரித்தாலே போதும், பிறகு தினமும் கீரைகளை அதிலிருந்து எடுத்து சமைக்கலாம். இது தவிர சுரைக்காய், காராமணி, பூச்செடிகளையும் வளர்த்து வருகிறேன். பழ வகைகளில் சப்போட்டா, மாதுளை, வாழை ஆகியவற்றை பயிட்டு நிறைய காய், கனிகளை நான் பயன்படுத்தி வருகிறேன். என் கணவரும் மாடித்தோட்டம் அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதுகுறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்குவார். அவ்வாறு கும்பகோணம் அருகிலுள்ள சரஸ்வதி பாடசாலை என்ற பள்ளியில் மாடித்தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை மதிய உணவில் சேர்த்து சமைத்து வருகிறார்கள். அதேபோல் கும்பகோணம் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்புராஜபுரம் என்ற கிராமத்தில் சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியில் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்து அதைப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். அவர்களும் அதில் விளையும் காய்கறிகளை மதிய உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆக சென்னையில் தனி வீட்டில் வசிப்பவராக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவராக இருந்தாலும் மாடித்தோட்டம் அமைக்கலாம். மாடித்தோட்டம் என்பது வருமானத்தை ஈட்டித்தருவது என்றாலும் அத்தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும், பூக்களையும் அதிகாலை எழுந்து பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அலாதியானது” எனக் கூறி முடித்தார் ப்ரியா.
– பெ. தனராஜ், படங்கள்: ஜி. நிர்மல் ராஜ்