‘மாடித்தோட்டம் மகிழ்ச்சியான அனுபவம்’ – சரோஜாவின் சந்தோஷம்!
சென்னை போன்ற பெரு நகரங்களில் குடியிருக்க வீடு கிடைப்பதே சிரமமான நிலையில் மாடியில் தோட்டம் அமைத்து அதில் செடிகளை வளர்ப்பது என்பது மிகச் சவாலான, சிரமமான விஷயம். மாடித்தோட்டம் அமைப்பது இப்போது நகரங்களில் பெரும்பாலாகப் பரவிக் கிடக்கிறது. வீட்டில் உள்ள காலி இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்ப்பதைத்தான் மாடித்தோட்டம் என்கிறோம். கிராமங்களில் வீட்டருகே இருக்கும் வயல் வெளியைச் சுற்றிலும் காய்கறிகளையும் பழங்களையும் பயிரிட்டிருப்பார்கள். அதில் தங்களுக்குத் தேவை போக மீதமிருப்பவற்றை விற்று வருமானம் பெறுவார்கள். அதேபோல நகரங்களில் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் மாடித்தோட்டம்.
அப்படி சென்னை அண்ணாநகரில் வசிக்கும் சரோஜா தன் வீட்டைச் சுற்றிலும், மாடியிலும் தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்துப் பராமரித்து வருகிறார். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, மாதுளை அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை, பிரண்டை, தூதுவளை, வாழை, என வீட்டைச் சுற்றியும், மொட்டை மாடியில் என ஐந்நூறு ச.அடியில் தோட்டச் செடிகளையும், குரோட்டன்ஸ், மற்றும் வில்லாவில் வளர்க்கும் அழகுச் செடிகளையும் பழச் செடிகளையும் பிளாஸ்டிக் வாளிகளிலும், மண் சட்டிகளிலும் வளர்த்து வருகிறார் சரோஜா.
தன் அனுபவங்களை சரோஜா நம்மிடம் விவரித்தார்.
”வீட்டைச் சுற்றிலும், காலியாக உள்ள இடங்களிலும், மொட்டை மாடியிலும் இடம் கிடைத்தால் போதும் தோட்டம் அமைத்து விடலாம். இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், இயற்கை உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். தங்களுக்குத் தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். சமையலறைக் கழிவு நீரை வீட்டின் பின்பக்கத்தில் வரச் செய்தாலே போதும். செடிகளுக்குச் சத்துக்கள் கிடைப்பதோடு அதற்குத் தேவையான தண்ணீரும் கிடைத்துவிடும். அதனால் வீட்டின் பின்புறத்தில் வளரும் செடிகளுக்குத் தனியாக தண்ணீர் ஊற்றவேண்டிய அவசியமில்லை.
டெசர்ட் ரோஸ் என்ற பூக்கள் மிக அழகானவை. அவை என் மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்துவிடும். இவற்றை பெரியபாளையத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் தருகிறார். அதை செடிகளில் வளர்த்து அவை பூ பூப்பதை ரசித்துப் பார்ப்பதில் எனக்கு அலாதியான பிரியம். தற்போது ஒவ்வொரு அந்த டெசர்ட் ரோஸ் செடி ஒவ்வொன்றின் விலையும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டவை. எனவே அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்க்கிறேன். செடிகளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அப்படி வந்தால் அதை அறிந்துகொள்வதற்காகவே வீட்டைச் சுற்றிலும் மாடியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அவற்றை என் அறையிலிருந்து பார்க்கும் வசதியையும் செய்திருக்கிறேன். எல்லா செடிகளையும் இயற்கை விவசாய முறையில்தான் வளர்க்கிறேன், என் தேவைகள் போக மீதியை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்துவிடுவேன்.
இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்ணவேண்டும் என்கிற உணர்வு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளதும், அதனால் வீட்டு மொட்டை மாடிகளில் தோட்டம் அமைப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. செடிகளில் மண்ணுக்குப் பதிலாக தென்னை நார்க்கழிவு இருந்தால் அடிக்கடி கொத்திவிடத் தேவையிருக்காது. தோட்டக்கலைத் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை அலுவலகத்திலிருந்து விதைகளை வாங்கிப் பயன்படுத்துவேன். தோட்டக்கலைத்துறையில் முதன் முதலில் விதைகளைப் பொதுமக்களுக்கு விற்கத் துவங்கிய நேரத்தில் அந்த ‘கிட்’டை முதன்முதலில் அரசு இயக்குநரிடமிருந்து பெற்ற அதிர்ஷ்டசாலி நான். விதைகளை ஒரு தடவை வாங்கினால் போதும். அடுத்தடுத்த தடவைகளுக்கு மாடித்தோட்ட செடிகளில் இருந்தே விதைகளைச் சேமித்துக் கொள்ளலாம். மேலும் நாம் வளர்த்த செடிகளில் இருந்து கிடைக்கும் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகளை நாமே பறித்து சமையல் செய்வதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்பது மட்டும் உண்மை” என்கிறார் சரோஜா.
சிறந்த தோட்டக்கலை விருதை மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடமிருந்து பெற்றிருக்கிறார். இது தவிர, நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நிறைய விருதுகளை வாங்கியிருக்கிறார். மகளிர் அமைப்புகள், மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகளைக் கனிவுடனும், பொறுமையாகவும் சொல்லித் தருகிறார். நிறைய ஊடகங்களும் இவருடைய பேட்டியை ஒளிபரப்பியதால் வெளியூர் நண்பர்களுக்கும் செடிகள் வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.
கடந்த பதின்மூன்று வருடங்களாக வீட்டைச் சுற்றிலும், மாடியிலும் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.
– பெ. தனராஜ், படங்கள்: ஜி. நிர்மல் ராஜ்