ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல், கல்வி, தொழில்நுட்பத்துறையின் மூன்றாவது இயக்குநர் நான்ஸி ஜெ அனபெல் (இதற்கு முன்பிருந்த இயக்குநர்கள் டாக்டர் பாலாஜி, செந்தில்குமார்). அவருடைய பிரிவு உபசார நிகழ்ச்சியின் போது பேராசிரியர் சுவாமிநாதன் குறிப்பிட்டது, “நான்ஸி, அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒருங்கே இணைத்தவர்”.
மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொருவிதமான தனித்தன்மை இருக்கும். அது அவ்வப்போது அவர்கள் பணி செய்யும்போது வெளிப்படும். இதைச் சரியாகக் கவனித்தால் அந்தத் தனித்தன்மை நாம் பின்பற்றக்கூடிய ஒன்றாகக் கூட இருக்கலாம். இவை அலுவலக சட்டம் போட்டோ அல்லது கண்டிப்பின் மூலமாகக் கூட கொண்டு வரமுடியாது. உதாரணத்திற்கு அலுவலகம் காலை 10.00 மணி என்றால் ஒன்பது மணிக்கு வந்து அலுவலகப் பணியைக் கவனிப்பது, சிலருக்கு சரியான நேரத்திற்கு வருவது போல் நேரத்தைத் திட்டமிட்டு வீட்டிலிருந்து கிளம்புவது. இதில் நான்ஸி மேடம் எல்லோரும் வருவதற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்துவிடுவார்.
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் எனக்குக் கிடைத்த பணி, ‘நம்ம ஊர் செய்தி’ என்ற மாதமிருமுறை பத்திரிகை. இயக்குநர் நான்ஸி ஜெ.அனபெல் ஆசிரியராகவும் நான் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினேன். இந்த பத்திரிகை சென்னையில் அச்சடிக்கப்பட்டு தமிழகத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் வெளியிடப்பட்டது.
காலையில் அவருக்கு இருக்கும் உற்சாகம் இரவு வரை அவரிடம் இருப்பது நான் ஆச்சரியப்படும் விஷயங்களில் ஒன்று. காலையில் அவரிடம் பேசினாலே அந்த முழு உற்சாகமும் நமக்குத் தொத்திக்கொள்ளும். ஒரு விஷயம் குறித்து அவரிடம் விவரித்தோம் என்றால் மேலோட்டமாக பார்த்தால் ஒரு தகவல் விளங்கும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அதிலிருந்து இன்னொரு உண்மை வெளிப்படும். ஆனால் மேடம் அதை நுட்பமாக அலசி ஆராய்ந்து அதில் அவர் உற்று நோக்கும் குணம் வேறு ஒரு பரிமாணத்தையே கொடுக்கும், நம்மிடம் அதைத் தெரிவிக்கும்போது, ‘அட’ நமக்கு இது எப்படி தோணாமல் போனது என்பது போலிருக்கும்.
உதாரணத்திற்கு புதுக்கோட்டையிலிருந்து உள்ளடங்கியுள்ள ஒரு கிராமம் ராஜாளிப்பட்டி. எனக்குக் கொடுத்திருந்த வேலை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் அளிக்கும் தகவல்களை அவர்கள் எந்தளவு பின்பற்றி பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கிறார்கள் என்பது மட்டுமே. அதனால் என்னுடைய எண்ணம், செயல், நோக்கம் அனைத்தும் அதைச் சுற்றியே இருந்தது. வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் அவர்கள் நம் ஆலோசனைகளைப் பின்பற்றி தங்களுக்கு நேர இருந்த நஷ்டத்தை அவர்கள் தவிர்த்தது எப்படி என்பதை அவர்கள் மூலமாகவே வெளிக்கொண்டு வருவதும் அந்தக் கட்டுரையின் முக்கிய மையப்பகுதி. அந்த கிராம மக்களைப் பார்த்து பேட்டி கண்டு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தேன். அதில் அங்கு வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் அழகியலில் அதிக அக்கறையும் முக்கியத்துவமும் கொடுத்திருந்தார்கள். இதைப் போகிற போக்கில் ஒரு வரியில் அந்த அறிக்கையில் கூறியிருந்தேன். அதாவது அங்கிருக்கும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகுநிலையம் செல்ல சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் வேனில் பயணிக்க வேண்டும். எதற்கு வேன் என்று கேட்கிறீர்களா?, போய்விட்டு வரும் நேரத்தில் மேக் அப் கலையக்கூடாது அல்லவா… அந்தக் கிராமத்தில் இருந்தது ஒரே ஒரு வேன் மட்டுமே. அவருக்கும் நல்ல வருமானம். இதில் வேடிக்கை என்னவென்றால் மணமகள் அலங்காரம் என்றால் மணமகளுக்கு மட்டும் மேக்-அப் போடமாட்டார்கள் அவரைக் கூட்டிச் செல்லும் பெண்களும் தங்களை அழகு படுத்திகொள்வார்கள். இதற்கு கட்டணமும் குறைவு. மேலும் ஒருவருக்குக் கட்டணம் செலுத்தினால் இன்னொருவருக்கும் இலவசமாக மேக்-அப் போட்டுவிடுவார்கள். இந்த சலுகையைப் பயன்படுத்தி மணமகளின் தோழிகள் அவருக்கும் உறவினர்கள், புதிதாகத் திருமணம் ஆனவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே அழகு நிலையம் போவார்கள், மேற்கூறப்பட்ட இவை அனைத்தும் நேரடியாகக் கூறினேன். அறிக்கையில் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர் உடனே கூறியது ஏன் அந்தக் கிராமப் பெண்களுக்கு அழகியல் பயிற்சி கொடுத்து அவர்களையே அழகுக்கலை நிபுணர்களாக மாற்றக்கூடாது. இதனால் அவர்களுக்கும் நிலையான வருமானம் கிடைக்கும். கிராமப்புற பெண்களுக்கும் அழகுணர்ச்சி குறையாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான்! (வேன் காரருக்கு காதில் புகை நிச்சயம்).
தெளிவான சிந்தனை, ஸ்பஷ்டமான பேச்சு, தேர்ந்தெடுத்துப் பேசும் கனிவான வார்த்தைகள், கோபத்தைக் கூட இவ்வளவு மென்மையாக கூறமுடியுமா என்று பல நாட்கள் நினைத்ததுண்டு, அவர்கள் வருத்தப்பட்டால் அவர் கூறும் வார்த்தைகள் நம்மை வருத்தப்பட வைக்கும். தலைமைப் பண்புகள் நிறைய கொண்டிருப்பவர். அடுத்தவர்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பவர். அடிக்கடி அவர் கூறும் வார்த்தைகளில் என்னைப் பாதித்தது, ‘நம்மிடம் பேசுபவர்கள் யார் எனப் பார்க்காதீர்கள், அவர்கள் கூறும் விஷயங்களை மட்டும் பாருங்கள்’ என்பார். வேலை என்று வந்துவிட்டால், நேரம் காலம் கிடையாது 100 சதவிகிதம் அர்ப்பணிப்பு! அதில் சிறிது கூட (ஆடி) தள்ளுபடி கிடையாது. வெளியூர் சென்றால் எல்லோருக்கும் தங்குமிடம், உணவு எல்லோருக்கும் கிடைத்துவிட்டதா என கேட்டு அறிந்து விட்டுத்தான் உணவு உண்பார். பெரும்பாலான நேரம் துறையில் அனைவரும் உணவு உண்டபிறகுதான் உணவருந்தவே செல்வார் அல்லது எல்லோரும் அவருடன் சேர்ந்து உண்ண வேண்டும். நாம் எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்துவிடலாம். அடுத்தவர்களை வேலை வாங்குவது என்பது தனித்திறமை. அதிலும் குறிப்பாக நாம் நினைத்தபடி அந்த வேலை வரவேண்டும் என்றால், நாம் எதிர்பார்க்கும் வடிவமைப்பு, உள்ளடக்கப்படும் தகவல்கள் என அனைத்திலும் ஓர் ஒழுங்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிப்பது என பல விஷயங்கள் அந்தப் பணியைச் செய்வோரிடம் எடுத்துரைக்கப்பட வேண்டும், எப்படிச் சொன்னால் இவர் இதைப் புரிந்துகொண்டு செயல்படுவார் என்பதைத் தெரிந்து அவர்களுக்குப் புரியும் வகையில் இவர் விவரிப்பது இவருடைய ஸ்டைல்! நான்ஸி ஜெ. அனபெல் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் மற்றொரு சிறகு!
– பெ.தனராஜ்